Thursday, September 24, 2009

பணமும்..! குணமும்...!!

மனிதனிடமிருந்து
பணத்தைப் பிரிப்பது குணம்
குணத்தைப் பிரிப்பது பணம்;

உலகில்
மதங்கள் ஆயிரம்
ஜாதிகள் கோடியென உலவினும்
சமுதாயத்தில் மனிதன்
ஏழை பணமுடையான் எனும்
இருவகையில் தான்
பார்க்கப்படுகிறான்
பிரிக்கப்படுகிறான்;

தன் இருப்பிடத்தில்
மகிழ்வையும் மதிப்பையும் கொடுப்பதன்றி
வேற்றொரு குணமில்லை பணத்திற்கு
அதைக் கொண்ட மனிதன் தான்
தீ வைத்துத்கொள்கிறான்
தன் குணத்திற்கு;

இரத்தச் சொந்தங்கள்
பால்ய நண்பர்கள்
யாவரும் விலகிடுவர்
பணம் கொண்ட நேரத்தில்
ஆணவம் கொண்ட மனிதனை விட்டு ;

பணம்
சில மனிதரின் மனதை
கொடை உள்ளமாய் மாற்றுகிறது
பல மனிதரின் மனதில்
கோடையாய் அவர் குணத்தை
வற்றவைக்கிறது;

பொதுநலவாதி கூட
சுயநலவியாதி பிடித்து அலைவார்
பணத்தை அவர் துணையாக்கும்போது

பணம் மாற்றுகிறதா குணத்தை?
இல்லை
குணம் மாறுகிறதா பணத்தால்?
இவ்விடை தெரியா வினவுகள்
உலகில் உலவுகின்றன
இன்றும் கொடை மன மனிதர்கள்
சில‌ர் வாழ்ந்து கொண்டிருப்பதால்!

உலகில் யாரும் தினம்
பார்க்க போவதில்லை பணம்
மனிதருக்கு மிக முக்கியம்
நல்ல குணத்தோடு ஓர் மனம்!

--

Saturday, September 19, 2009

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்....!!


இறைவன் மிகப் பெரியவன்!

நம்மை படைத்தான்
பின் நமக்காக உலகை வடிவமைத்தான்;

உயிர் கொடுத்தான்
அதற்கு உடல் கொடுத்தான்
பின் உணர்வையும் கொடுத்து
நம்மை மனிதன் ஆக்கினான்;

தனிமையில் நாம் தவிக்காதிருக்க
சொந்தங்கள் கொடுத்து
பலம் ஊட்டினான்;

மிருகமாய் நாம் வாழாதிருக்க
அறிவை கொடுத்து மெருகூற்றினான்;

இத்துனையும் இதற்குமேலும்
நாம் கேட்டும் கேட்கமாலும்
கொடுக்கும் அவன்
நமக்கு கொடுத்த
கட்டாய கடமைகளிலொன்று
நோன்பு;

நோன்பென்பது
உணவின் அருமைத்தெரிய பசித்திருந்தும்
இச்சைகளிலிருந்து விலகி தனித்திருந்தும்
இறைவனை தொழுவதற்கு விழித்திருந்தும்
நற்பண்புகள் கற்றுத் தரும் செயல்;

முப்பது நாட்களில் மட்டும்
மனதில் அடக்கமாய்
குணத்தில் அமைதியாய்
வாழும் நாம்
வருடம் முழுவதும்
அப்படி வாழ முயற்சித்தால்
உலகெங்கும் அதர்மங்கள் குறையுமல்லவா?

இதோ!
இவ்வருடத்தின்
புனித மாதம் முடிந்தது;
நாளை நோன்பு பெருநாள் கொண்டாட்டம்
நம் மனதில் எங்கும் உற்சாகம்;

நாளை முடிந்து போய்விடில்
தேவையன்றி தேவையில்லை
தேவன் நமக்கு!

இனி வரும் காலங்கள்
நம் மனதின் போக்கை
மாற்றட்டும்;

இறைக்கு நன்றி சொல்லவும்
அவனை தொழுது நன்மை பெறவும்
நம் மனம் நாடட்டும்;

அவனும் அவன் நபியும்
சொன்ன வழியில்
நம் வாழ்க்கை மாறட்டும்;

அவனருள் பெற்று
நமக்கு மறுமையில்
சுவர்க்கம் சொந்தமாகட்டும் என
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
என்னுடைய ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்களை
உங்களுக்கு சமர்பிக்கிறேன்.