Saturday, September 26, 2020

SPB என்னும் உறவு

எங்க வீட்டில் பானாசோனிக் டேப் ரிக்கார்டரில் கேட்ட முதல் குரல் இவருடையது தான்.அப்போ கேட்ட பாடல் தமிழ் பாடல் அல்ல அவர் அதிகம் குரல் கொடுத்து அந்த பாடல்களால் ஒட்டு மொத்த நாட்டுக்கே அறிமுகம் ஆன சல்மான் கான் பாடல்கள் தான்."திதி தேரா தேவர் திவானாவா"வில் ஆரம்பித்து "பஹூத் பியார் கார்தே ஹேன்","பெஹ்லா பெஹ்லா பியார் ஹை"னு லிஸ்ட் நீளும்,அதிலும் "ஜியே  தோ ஜியே கைஸே" எல்லாம் வேற லெவல் மெலடி சல்மானுக்கு எஸ்பிபி பாடியது.இந்தியில் எஸ்பிபி குரல்ல மோஸ்ட் பெஸ்ட்னா பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த "ஏக் துஜே கே லியே" படத்தில் வந்த "தேரே மேரே பீச் மே" பாடல் தான்.அப்படியே மனசை இலகுவா கரைச்சிடும் இந்த பாடலை எஸ்பிபி வேற லெவலில் உருகி பாடியிருப்பார்.

என்னடா இது...! இந்தி தெரியாது போடா டீ சர்ட் பேமஸ் ஆகி சேல்ஸ் பிச்சிட்டு போகும் இந்த நேரத்தில் அவருடைய அறிமுகத்தை இந்தில ஆரம்பிச்சுருக்கானேனு நினைக்காதீங்க.இப்ப என் சிறுமகள் யூட்யூப் மைக்ல வாத்தி கம்மிங்ன்னு சொல்லிய உடன் பாட்டு ஓடும் அளவிற்கெல்லாம் தொழில்நுட்பம் வளராத காலம் என்னுடையது.வீட்டில் பேசும் மொழி உருது என்பதால் இந்தி பாடல்கள் கேஸட்களுக்குள் ஆக்கிரமிப்பு செய்துகொண்டன.

அருணாச்சலம் வந்த சமயம் சொந்த ஊரான உடையார்பாளையம் போன போது ஜெயங்கொண்டம் குறுக்க ரோட்டில் இறங்கி வேறு பஸ் மாறி கங்கைகொண்ட சோழபுரம் வழியா ஜெயங்கொண்டம் போகனும்.அப்போலாம் பஸ் வர அரைமணி நேரம் இருக்குன்னு வேன் ட்ரிப் எடுத்து பஸ் ஸ்டான்ட் அருகில் இறக்கிவிடுவார்கள்.அப்படி ட்ரிப் அடித்த வேனில் "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா"னு அருணாச்சலம் இன்ட்ரோ சாங்கை ஹை பிட்ச்சில் பாட அதை ரசித்த நினைவு தான் எஸ்பிபிக்கும் எனக்கும் ஆன தமிழ் பாடல் அறிமுகம்.

மற்ற ஹீரோக்களை விட எனக்கு எஸ்பிபினா ரஜினி,கமல் & அஜித்.டிவிட்டரில் 
@NARSIMP நர்சிம் மோகனுக்கு குரல் கொடுக்க பிறந்தவர் என எஸ்பிபியை  சொன்னதை போல் நான் சொல்லனும்னா ரஜினியை இன்னும் பட்டித் தொட்டிக்கெல்லாம் கொண்டு போனது அவருக்கு மாஸ் இன்ட்ரோ கொடுக்கும் பாடல்களை தவறாமல் பாடிய எஸ்பிபி தான்.பஸ் ஸ்டாப் டீக்கடைகள்,சன்டே சலூன் கடைகள்,டவுன் பஸ்,ரூட் பஸ்,ஏர் பஸ்,மினி பஸ் என எங்கும் ரஜினியும் எஸ்பிபியும் ஒன்றாகவே தங்கள் குரலை ஒலித்தார்கள்.அநியாயகங்களை கண்டா தலைவனுக்கு இப்படி தான் நரம்பு புடைச்சுக்கும்னு போண்டா மணி வடிவேலை பார்த்து சொல்வது போல தான் நம்மை பொருளாதார அளவில் யாராவது சீண்டிவிட்டால் நேராக நம் மனது போன் மியூசிக் லைப்ரரியில் அது வரை தூங்கி கொண்டிருந்த சிங்கத்தை எழுப்பியது போல் ஓடும் "வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்".அது ஓடும்வரை என்னென்ன லெவலுக்கு போய் சீண்டினவன் முகத்தில் கரிய பூசணும்னு நினச்சோமோ எல்லாத்தையும் நினைச்சிட்டு பாட்டு முடிந்த உடன்,'போடா உன் வேலைய பாத்துட்டு'ன்னு நார்மல்க்கு வந்திடலாம்.அப்புறம் ஒருவன் ஒருவன் முதலாளி,சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு முதல் சும்மா கிழி வரை இந்த காம்போ டெட்லி காம்போ.ஏன் "காதலின் தீபம்  ஒன்று"பாட்டுலாம் பிடிக்காதான்னு யாராவது கேட்டா அவங்க 70ஸ் கிட்ஸ்னு ஈஸியா கண்டுபிடிக்கலாம்.

கமல்-எஸ்பிபி காம்போ பாடல்கள் எல்லாம் போனில் ம்யூசிக் லைப்ரரி அதாவது முன்னூறு ரூபாய்க்கு 4 ஜிபி மெமரி கார்டு வாங்கி போன்ல போட்ட காலத்தில் தான் சேர்ந்தது."புதுச்சேரி கச்சேரி"பாட்டு எஸ்பிபி-கமல்-ராஜா மூன்று பேருக்கும் சேர்த்து,மூன்று பேரும் தனித்தனியா இந்த பாடலை தனக்காகவே செய்துகொண்ட அறிமுகம்னு சொல்வேன்.'ஒரு காதல் கடிதம் விழி போடும்'னு வலையோசைல பாடும்போது செவிகள் நனைந்த மழை அது."சிங்களத்து சின்ன குயிலே" பாட்டுக்கெல்லாம் காலத்துக்கும் கமல் நன்றி கடன் செலுத்தனும்.அபூர்வ சகோதரர்கள் டைட்டில் இவங்க ரெண்டு பேருக்குமே பொருந்தும் அளவிற்கு "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ"ன்னு துள்ளலான பாடலையும்,"கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன்,காற்றடிக்கும் காலம் மாவு விற்க போனேன்"னு ஜிஎஸ்டி காலத்திலும் கொரோனா காலத்திலும் கடை விரித்து காலி ஆனா கோமான்கள் பாடும் சோகப்பாடலையும்  ஒரே படத்தில் பாடிய அபூர்வ காம்போ.

90ஸ் கிட் என்பதாலும்,டிவிட்டர் தொடங்கும் முன்பே தல-தளபதி சண்டையை
ஆரம்பித்து எத்தனை பிளாப் கொடுத்தாலும் வீரம் விவேகத்தை விட விஸ்வாசம் முக்கியம்டான்னு தல பக்கம் நிக்குற ஸ்லீப்பர் செல்களில் ஒருவன் நான்."வத்திக்குச்சி பத்திகாதுடா"வில் ஆரம்பித்து,"கண்ணை பறிக்கும் சூரியனா?ரெட் ரெட் ரெட்'னு டெம்பர் ஏத்தி மூச்சு விடாம "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" பாடி "உன்னை பார்த்த பின்பு நான்"னு தன் முத்திரைகள்ல அடுத்த தலைமுறை நடிகரையும் இணைத்து கொண்டவர் எஸ்பிபி.இந்த வரிசையில் "மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு",அஜித் பாடல்களிலேயே நிறைய பேருக்கு மிகவும் பிடித்த "நலம் நலமறிய ஆவல்",ஆசை படத்தில் "ஒரு முறை எந்தன் நெஞ்சில்" பாடல்,அஜித் அறிமுகம் ஆன அமராவதி  படத்தில் "புத்தம் புது மலரே"பாட்டு எல்லாம் அஜித்துக்கு  வேற லெவல் ரீச் தந்தது.

மோகன்,ராமராஜன்,விஜயகாந்த்னு அவர் கொடுத்த குரலில் வந்த பாடல்கள் எல்லாம் என்றும் தாலாட்டும் ராகம் ரகம்.இசை எது வரை கேக்கும்னு மொட்டையா கேட்டா ,ஓங்கி அறைந்து எதுவரை வலிக்குதோ அதுவரை கேக்கும்னு சொல்பவர்கள் மத்தியில் "பூமியில் செவிகள் உள்ளவரை"னு பதிலை இப்பதிவை முடிக்கிறேன்.

ஒலிக்கும் வரை வாழ்வீர்!!!