Saturday, March 27, 2021

த்ரோ பால்.....!

மதியம் சாப்பிட வந்த அசோக்கிற்கு வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் சத்யா தினமும் மாலை கிரிக்கெட் விளையாட செல்வதாக சொன்னது சட்டென நினைவு வர,மொபைலை கையில் எடுத்தவன் காண்டாக்ட் லிஸ்ட்டில் சத்யாவின் பெயரை தேடி அழுத்தினால் பதில் கூறாமலே லைன் கட்டானது.மறுமுறை அழைத்தும் ஏமாற்றமே மிஞ்ச,டிவியில் ஓடிய 'தலைநகரம்' படத்தில் வடிவேலு 'நானும் ரவுடி தான்' என ஜீப்பில் ஏற முயற்சிக்கும் சீன் ஓடிக்கொண்டிருக்க,இவன் மனதில் நானும் கிரிக்கெட் பிளேயர் தான் ஆனா என்ன விளையாண்டு ரொம்ப வருஷமாச்சு என தனக்கே சொல்லிக்கொண்டான்.அரை மணி நேரத்திற்கு பின் சத்யாவிடம் இருந்து போன்,ஏன்டா! இரண்டு முறை போன் பண்ணிருக்கன்னு விசாரிக்கவும்,இல்லைடா, 'நீ டைலி சாயங்காலம் கிரிக்கெட் விளையாட போறேன்னு சொன்னல்ல,இன்னைக்கு போறியாடா'ன்னு கேட்க முற்பட்ட அசோக்கை 'நீ நாலு மணிக்கு பக்கத்து ஸ்கூல் கிரவுண்டுக்கு வா'ன்னு சொல்லி சத்யா போனை வைத்தான்.

இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதை பார்த்தவனுக்கு அதை எப்படி வேகமாக கடத்துவது என்ற காரணங்களை தேடினான்.எழுதிக்கொண்டும்,லேப்டாப்பில் விளையாடிக் கொண்டும் இருந்த மகள்களை பார்த்து,'அப்பா,கிரிக்கெட் விளையாட போறேன்னு சொன்னான்'.அப்பா!உங்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரியுமா? நீங்க டிவில தான் பாப்பீங்கன்னு நினைச்சேன்,நேராவும் விளையாடுவீங்களான்னு மகள் கேட்டதும்,'பாட்ஷா' படத்தில் ரஜினியை பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு அவர் தம்பி கேக்கவும் தேவா பிஜிஎம்முக்கு கோட் சூட்டோடு ரஜினி நடக்கும் சீன் தான் அசோக்கிற்கு நினைவு வர,அவன் பள்ளி,கல்லூரி காலத்தில் விளையாடியவைகள் கண் முன் வந்து போயின.    

பேட் ஓனர் என்ற ஒரே காரணத்தை அணி நிர்வாகத்தின் சிபாரிசாக வைத்துக் கொண்டு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்குவது  காலங்காலமா ஸ்ட்ரீட் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத விதி என்பதால் முதல் பந்தை தன் அணிக்காக  எப்போதும் எதிர்கொள்வது அசோக் தான்.ஸ்ட்ரைட் பேட் போட்டு தூக்கி அடிக்கும் பழக்கம் இருப்பதால் சில பால் சிக்ஸ் ஆகிடும்,பல பால் கேட்ச் ஆகிடும்.ஏற்கனவே அணியில் போதும் என்றளவிற்கு பந்து வீச ஆள் இருந்ததால் அப்போதைய டீமின் தோனியே (அட விக்கெட் கீப்பர் பா)இவன் தான்.இப்படி நேரங்காலம் பார்க்காமல் விளையாடிய தருணங்கள் எல்லாம் கண் முன்னே வந்து போய்க்கொண்டிருக்க நேரம் நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது.அதுவரை உறங்கிக்கொண்டிருந்த அவன் மனைவி எல்லாத்தையும் கேட்டுட்டு அமைதியா படுத்திருந்தது போல்,பாப்பா உங்க அப்பா "பவுலிங்கா? பீல்டிங்கா?' என கலாய்க்கும் குரலில் கேட்க, 'சத்தியசோதனை டா  அசோக்' என சத்தமா சொல்லி முடித்தான்.திரும்பவும்,'பந்து பொறுக்கி போட,ஏன் இவ்வளவு பில்டப்பு? மறுபடியும் வம்பிழுக்க 'நேரம் ஆச்சு,நான் கிளம்புறேன்'னு எந்திரிக்க,பிரிட்ஜ்லேந்து ஒரு வாட்டர் பாட்டில் தண்ணி எடுத்து கொடுன்னு மகளுக்கு ஆர்டர் போட 2லிட்டர் பாட்டில் ஒன்னு தேடி வந்தது.வீட்டை விட்டு இறங்கும் முன் மகள்கள் இருவரும்,'அப்பா,"பேட்டிங்,பவுலிங்" ஒழுங்கா பண்ணுங்கன்னு கோரசா சொல்லி வழியனுப்பி வைத்தார்கள்.

பாட்டிலை வண்டியின் டேங் கவரில் வைத்து நேராக மைதானத்திற்கு வண்டியை ஓட்டினான்.இப்போது அவன் கண்ணில் வழி நெடுக்க எதுவும் சிக்கவில்லை.சாலையில் நடக்கும் இளம்பெண்கள் இவன் கண்ணுக்கு ஒரு பொருட்டே இல்லை,"உங்கள் வீட்டு மூத்த பிள்ளை,கூப்பிடும் குரலுக்கு உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடி வரும் வேட்பாளர்" போன்ற மைக் சவுண்டுகள் எல்லாம் அவன் காதுகளுக்கு கேக்கவில்லை,அவன் ஊரிலேயே முதன் முறையாக இரண்டு நாளுக்கு முன் திறந்திருந்த பீட்சா,பர்கர் கடை கூட அவன் நாவை உசுப்பேற்ற முடியவில்லை.எந்நேரமும் இவன் வளர்ச்சியை பற்றியே சிந்திக்கும் தொழில் போட்டியாளர் கூட திசை திருப்பும் வேலையை செய்ய முடியவில்லை.

மைதானத்திற்குள் வண்டி நுழைந்ததும்,அங்கே பள்ளி படிப்பை முடிக்கும் பருவ வயதினர் பிளாஸ்டிக் ஸ்டம்ப் வைத்து  விளையாடி கொண்டிருப்பதை கவனித்து வண்டியை நிறுத்தினான்.த்ரோபால் முறையில் கிரிக்கெட் விளையாடிய அவர்கள் அனைவரும் மிகவும் துடிப்புடன் விளையாடுவதை கண்டு ஆச்சர்யப்பட்டான்.அப்போது விளையாடிக் கொண்டிருந்த அணிக்கு            பவுண்டரிகள் அடிப்பது கடினமாக இருந்தது.சரியும் சீட்டுக்கட்டுகளை போல் விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தோல்வியை தழுவியது.ஜெயிக்கும் அணிதான் முதல் பேட்டிங் என்ற மற்றுமோர் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டின் எழுதப்படாத விதியின் அடிப்படையில் எதிரணி களமிறங்கியது.

"ஆறு ஓவர் வச்சு,இரண்டு மேட்ச் விளையாடலாம்டா!"

"வேணாம், இவ்ளோ  பேட்ஸ்மேன் இருக்காங்க ஏழு ஓவர் மேட்ச்சே விளையாடுவோம்"னு எதிர் டீம்ல ஒருத்தன்னு பேச ஆரம்பிச்சு ஏழு ஓவர் மேட்ச் என்று முடிவானது.

தம்பிகளா! ஸ்டம்ப் டு ஸ்டம்ப் பால் போடுங்க..பேட்டிங்ல பந்த நிதானிச்சு பாத்து அடிங்கன்னு தோற்ற டீமுக்கு அனுதாப அலை ஐடியா கொடுத்தான் அசோக்.

அண்ணே! அவனுங்க ஷார்ட் பிட்ச் பாலை யார்க்கர் பால்னு சொல்றவனுங்க,அவனுங்க கிட்டயே அட்வைஸான்னு பேட்டிங் டீம் ஆட்கள் எகத்தாளமாக அசோக்கை  பார்த்தார்கள்.முதல் ஓவரில் அவுட் ஆன பையன் வண்டிய எடுத்துட்டு போய் சிகரெட் வாங்கிட்டு வந்து ஊதி தள்ளினான்.பேட்டிங் டீம் கிட்ட பவர்புல் ஹிட்டர்ஸ் இருந்தாங்க.எப்படியோ ஏழு ஓவருக்கு 38 ரன்களை தேற்றிவிட்டனர்.இதற்கிடையில்,தொடைக்கு போட்டதுக்கே நோ-பால் கொடுத்தீங்க தலைக்கு மேல போட்டும் கொடுக்காம இருக்கீங்க,போன முறை தான ஒண்டவுன் இறங்குன,இப்ப செகண்ட் டவுன் இறங்கு,அடுத்த ஓவர் நான் தான் போடுவேன்னு எப்பயோ கேப்டன்கிட்ட சொல்லிட்டேன்னு பல பஞ்சாயத்துகள் வேறு.     

அடுத்து இறங்கிய அணிக்கு 39 பெரிய டார்கெட் இல்லை என்றாலும் அதை அடிக்க ஆள் வேண்டுமேங்குற கவலை தான்.ஓப்பனிங் இறங்கிய பையன் ஓங்கி அடித்து அவுட் ஆக அடுத்து வந்த பேட்ஸ்மேன் அவனும் நிதானித்து பார்ட்னரையும் நிதானிக்க வைத்து எளிதாக வெற்றியின் பாதைக்கு அழைத்து சென்றதை பார்த்த அசோக்கிடம் டியூசனுக்கு போகனும் நேரம் என்னன்னு கேட்டு ஒவ்வொருத்தராக கிளம்புவதை கவனித்த அசோக்,விளையாடினாலும் பசங்க படிப்புல கவனமா இருக்காங்கன்னு மனதில் பாராட்டிக்கொண்டான்.

ஆறு மணி ஆகவே வீட்டிற்கு திரும்பும் முனைப்பில் இருந்தவன்.நாலு மணிக்கு அவன் விளையாட வந்ததும் அதற்கிடையே சத்யா போனில் அழைத்து பிட்ச் ரெடி பண்ணுவதால் இன்று ஆட்டமில்லை என்று சொன்னதை மனதில் நினைத்து சிரித்துக் கொண்டான். 

கேம் ஓவர்...!