Saturday, March 21, 2020

கோவை முதல் கொரோணா வரை

2017 ஆரம்பத்தில் ஆதார் மொபைல் நம்பர் மாற்றும் மற்றும் நம்பர் ஏற்றும் ஐடி ஒன்றை எங்க ஏரியா ஃபேமஸ் நெட் சென்டர் ஓனர் வாங்கினார்..சுற்றி இருபது கி.மீட்டருக்கு அன்றைய தேதியில் அவர் வச்சதுதான் விலை.ஆட்டோ வச்சு அனோன்ஸ் பண்ணி ரணகளம் பண்ணார்.ஆரம்பத்தில் எடுத்த ஆதார்களில் போன் நம்பர் கிடையாது ஏன் இன்றளவும் கூட பல பேர் ஆதார்ல போன் நம்பர் ஏற்றாமல் இருக்காங்க.அந்த சமயம் ஆதாரில் கைரேகை வைத்து நம்பர் ஏத்திட்டா ஆதாரில் இருக்கும் தவறுகளை சரி பண்ணிடலாம்.அதை கம்ப்யூட்டர் தெரிந்தவங்க செய்ய வேண்டும் என்றாலும் ஆதாரில் போன் நம்பர் ஏற்றிருக்கனும்.ஏற்கனவே ஒரு சின்ன சென்டர் வாங்கியிருந்தாலும் எப்படியோ விளம்பரங்கள் செய்து,தான் மட்டும் செய்வது போல் ஆக்கினார்.
ஊரில் எல்லோரும் கூட்டம் கட்ட, சென்டர் வச்சுருந்தவங்க எல்லாம் எங்க வாங்குனாங்க,எப்படி வாங்குனாங்க என விசாரிக்க தொடங்கிய போது, தெரிந்த ஒருவர் வெப்சைட்டை அறிமுகப்படுத்த ஆன்லைன் ரிஜிஸ்டர் பண்ணி வைத்தால் நாங்களே கூப்பிடுவோம் என கட்.
இரண்டு வாரங்களுக்கு பிறகு சென்னை வருமாறு மெயில் அழைக்க நிறைய கனவுகளோடு பயணம் செய்தாயிற்று.பிஸினஸ் மாடல் நான்கு மணி நேரம் பேசி பேம்ப்ளட் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.ஐந்து நாட்களில் திருச்சிக்கு டிரைனிங் வாங்க வரும் போது ஏஜன்ட் பீஸ் கட்டனும்னு சொன்னாங்க.. இருபதாயிரம் எடுத்து கொண்டு என் நண்பன் பத்து கி.மீ.தள்ளி இருப்பவனுக்கும் ஐடியா கொடுத்து இருவரும் சென்றோம்.ஆனால் என் கண்கள் ஆதார் நம்பர் ஏற்றுவது மேல் தான்..என் ஏரியாவில் ஏற்கனவே கொடுத்து விட்டதால் வேறு இடம் செலக்ட் பண்ண சொன்னாங்க. 25 கிமீ தள்ளி இருக்கும் மாமியார் ஊரில் செலக்ட் பண்ணி வாங்கினேன்.வீட்டில் சொல்லி புரிய வைச்சு தாண்டவே பெரிய பூகம்பத்தை கடப்பது போல கடந்து வாடகைக்கு கடை  பிடிச்சு பிஸ்மில்லாஹ் சொல்லி கடை ஆரம்பிச்சா.நாலு கடை தள்ளி ஒரு ஹார்டுவேர் கடை காரண் இந்த ஐடிய வாங்கியிருந்த நியூஸ் தெரிய,போன் பண்ணி கேட்டா, உங்களுக்கு எப்படி கொடுத்தாங்கவென பதில்.. அப்புறமென்ன பேஸ்புக், நோட்டிஸ் என விளம்பரம் பண்ணி எப்படியோ ஆள வரவச்சாச்சுன்னு மூச்ச விட முன்னே மெயின் ஆஃபிஸ் ஸ்டாப் சொந்த பிரச்சினையில் வேலை விட்டு நிற்க.. இரண்டாவது ஆஃபிஸ் திறப்பது சிரமம் ஆக,அடிபிடித்து ஆளை தேடி உட்கார வைத்து மறுபடி ஃபர்ஸ்ட் கியர் போட்டா ப்ரைவேட் சென்டர்ல ஆதார் நம்பர் மாத்துற சிஸ்டம் ஸ்டாப்.என்னடா இப்படி ஆகிடுச்சே என்ற சமயத்தில் கைரேகை வைத்து ஆதார் பிரிண்ட் எடுப்பது மட்டும் உதவியது.பின்னர் அதுவும் கழற்றி விட ரேசன் கார்டு, பாஸ்போர்ட்,ஏர் டிக்கெட் என செகன்ட் கியர் பிக்கப் ஆகும் சமயத்தில், ஆபீசில் வேலை செய்யும் பெண் கணக்கில் சரியில்லை என தெரியவர விசாரிக்காமல் அதை சரிசெய்ய எடுத்த முயற்சியில் அந்த பெண் கழன்றி விட பெரிய குழப்பம்.
அப்பா இனி ஒன்று நீ பாரு இல்ல,உன் மனைவிய பார்க்க சொல்லு என்றதும்
மெயின் ஆஃபிஸ் மனைவி பார்த்துக்க நான் அந்த ஆஃபிஸ் போனேன்.

2 மாதம் முடிந்து முகநூலில் சிறுவர் ஆதார் எடுக்கப்படும் என்ற செய்தி பார்த்ததும்..உடனே போன் பண்ணி எப்படி என விசாரிக்க கோவையில் ஒருவரை அறிமுகம் செய்தார்.அப்போது தான் கோவை முதல்முறை விஜயம்.ஆம்னி பஸ்ஸில் ஸ்லீப்பர் புக் பண்ணி போனதும் அப்போதுதான்.காலையில் இறங்கி போத்தனூர் போக ஓலா புக் பண்ணி (இதுவும் முதல் முறை)போனேன்.இரயில்வே ஜங்ஷன் பின்னாடி ஆஃபிஸ்.டிபன் சாப்பிட போனால் ஏரியாவில் எங்கும் தாடிக்கள் காண முஸ்லிம் ஏரியா போல என மனதில் நினைத்துக் கொண்டேன்.அருகில் பள்ளிவாசலும் பிரியாணிக்கடையும் இருந்தது.தம்பி ஆஃபிஸ் வந்துட்டேன் என்றார் சென்றால் நிறைய லேப்டாப்,ஆதார் கிட் சகிதம் மனிதர்கள்.ஏற்கனவே இரண்டாம் ஆஃபிஸ் திறக்க அப்பா கடனாக கொடுத்தது அடைக்கபட கஷ்டப்படுவதால்..பெரிய கிட் வேண்டாம் ஆதார் சைல்ட் கிட் போதும் என்றேன் அதற்கு கட்டணம் பேசி அட்வான்ஸ் கொடுக்க டேப்லட் ஒன்றை கொடுத்தார்.ஐடி அப்ளை பண்ணிட்டேன் வந்த உடன் சொல்லி அனுப்புறேன் என ஃபர்ஸ்ட் கோவை டூர் பினிஷ் ஆனது.

இரண்டு வாரம் ஆகியும் அப்டேட் இல்லை மறுபடியும் கோவை சென்று கேட்டு வரலாம் என கிட் சகிதம் கிளம்பி போனா,அன்றைக்கு ஐடி ரெடி.புல் பேமெண்ட் பண்ணிட்டு திரும்ப வந்து போர்டு மாட்டி விளம்பரம் பண்ணி ரீ பிக்கப்..புது கிட்டில் ஆதார் நம்பர் மாற்றுவதும் சேர்த்து வந்ததால் டபுல் மகிழ்ச்சி.அப்பா கடன் என்பது மாத சீட்டு கட்டிடனும் பணம் அவங்க எடுத்துப்பாங்க.இது கொஞ்சம் அடைபட ஆரம்பிக்க ஃபுல் கிட் வச்சுருப்பவங்க மட்டுமே சைல்ட் கிட் என UIDAI ஆர்டர் போட.. முதல் முதலாக நகை பள்ளிக்கூடம் சென்றது.. அம்மா அதை வித்துட்டு செய்ங்க வைக்காதீங்கன்னு சொல்ல எதிர்ல மாமியார் தரப்பு வச்சு செய் என மனைவிய ஆப்பரேட் பண்ண,வச்சு கிட்க்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு...இந்த நேரத்தில் ஆல் ப்ரைவேட் சென்டரும் கேன்சல் ஒன்லி பேங்க் என ஆர்டர் வர கோவைக்காரர் அதற்கான வழியையும் சொல்லி, இரண்டாம் ஆஃபிஸ் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க்ல அப்ளை பண்ணா... முதலில் ஐடிய வாங்கிய நபர் நமக்கு தன் பணபலத்தால் ரெட் கார்டு போட... மொத்த இன்வஸ்மென்ட் ஜீரோ.

மனைவி ஏழு மாதங்கள் கர்ப்பம் என்பதால் எதையும் சொல்லாமல் கவர்ன்மென்ட் வைட் பண்ண சொல்லுச்சுன்னு தள்ளிட்டேன்.எட்டாம் மாதம் சேரில் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டாம் என டாக்டர் சொல்ல.. இரண்டாம் ஆபிசுக்கு ஆள் போட்டு மெயின் ஆபிசையும் மனைவியையும் நானே பார்த்துக்கொண்டேன்...பிரசவ செலவு ஐம்பதை தொட கையிருப்பு கரைந்தே போனது... மூன்றாம் மகளாய் பிறந்து அதற்கு நான் சந்தோசமும் சுற்றி இருப்பவர்கள் அனுதாபம் பரிதாபம் என இன்னும் பல தாபங்கள் பட... மனைவிக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை,மன உளைச்சலில் இருந்து வெளி கொண்டு வர ஆறு மாதம் உருண்டோட அதற்கு கொடுத்த விலை பிஸினஸ்.மிச்ச சொச்ச நகையும் உள்ளே போக..கொஞ்ச நாள் வரை அமைதியாய் போக.நடுத்தெருவில் எங்களை நிறுத்த போறீங்க ‌‌‌என சொல்வது வாடிக்கையானது...

ஆரம்பத்தில் நல்ல ப்ரைசில் கொடுத்த காரணத்தால் கடந்த இரண்டு வருடங்களாக குடும்பம் நடத்தவும்.. கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கும் வாய்ப்பு கிடைத்தாலும்.. முழுவதும் அடைக்க இன்னும் இரண்டு வருடம் பிடிக்கும் என ப்ளான் பண்ணி ஒர்க் பண்ணிட்ருந்தேன்...மேக்சிமம் ஒரு மாதம் தான் கையிருப்பு இருக்கும்.

பிப்ரவரி மாதம் முதல் இரு வாரத்திலேயே கொரொணா பாதிப்பில் சிக்கினோம்..அதிகம் மூவிங் உள்ள சென்னை-சிங்கப்பூர், திருச்சி- சிங்கப்பூர் புக்கிங் படிப்படியாக குறைந்து பிஸினஸில் கை வைத்து பின்னர் அரபு நாடுகளிலும் தடுப்பு சுவர் விழ மொத்த ரொட்டேசனும் அவுட்.. யாரும் இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆத்துர நிலை தான் கடந்த ஒரு மாதமாக...இப்பவே இந்த மாத ட்யூ எதுவும் க்ளியர் பண்ணல... வரும் செய்திகள் மேலும் ஒரு மாதம் கை வைக்கும் என்பதால் கொரோணாவால் காலி ஆகப்போகும் மனிதர்களில் அடியேனும் ஒருவன்...

கோவையில் வழிநடத்தியவர் விபத்தில் இறந்து போக அதன் பின்னர் யாரிடம் கேட்பது என விட்டாச்சு (அவர் மகளுக்கும் என் மகளுக்கும் ஒரே வயது தான்)இனி என்ன செய்வார்கள் என்பதே என் மனதில் ஓடியது.கொரோணா என்னை தோற்கடிக்க இன்னொரு காரணம் ஆன்லைன் ப்ரைஸ் பார்த்து அதை கொடுத்தா வாங்குவோம் இல்லன்னா வேணாம்னு சொல்லும் நபர்கள் அவர்களுக்கு நல்ல ப்ரைஸ் கொடுத்தேனே தவிர அந்த ப்ரைஸ் என்னை காப்பாற்றிக் கொள்ளும் அளவிற்கு ஏற்றவில்லை...

ஆன்லைனில் 799ரூ கன்வினியன்ஸ் ஃபீஸ் கட்டி எடுத்த எத்தனையோ பயணிகள் புக் பண்ண கம்பேனிக்கும் போன் பண்ண முடியாம,ஏர்லைன்ஸ்ல பேசுனா எங்க புக் பண்ணியோ அங்க கேள் என திணறுவதை டிவிட்டரில் பார்க்க முடியுது.என் கஸ்டமர் ஒருவர் ரொம்ப நேரம் பயணம் பண்ணி ஆபிசுக்கு வருவார்... நான்,ஏண்ணே இவ்ளோ தூரம் வர்றீங்க வாட்சப் பண்ணி பேங்க்ல பணம் போட்டா போதுமே என்பேன்.இல்ல தம்பி நேரா பார்த்து கைல வாங்குனா தான் மனதிருப்தி எனக்கு என்பார்...ஹியுமன் டச் வேணும் என்பார்...அவர்களை போன்றோரே இதுவரை கொண்டு வந்து விட்டார்கள்...இனி என்ன என்பது இறைவனுக்கு தான் வெளிச்சம்...!

No comments:

Post a Comment